சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே தெரிவித்தபடி 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். கடந்த 10ஆண்டு அதிமுக ஆட்சியின் நிதி சீர்கேடு குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தினர் தலையிலும் ரூ.2,63,976 கடன் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட விவரங்கள் பற்றிய 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கையில் உள்ள ஒவ்வொரு துறை வாரியாகவும், வருவாய், இழப்பு குறித்து அமைச்சர் ஸ்லைடு ஷோ போட்டு காட்டி விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட படி வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. இணையதளத்தில் இந்த வெள்ளை அறிக்கை முழுமையாக வெளியிடப்படும் என்றவர், முதல்வர் மு.க ஸ்டாலின் காட்டிய பாதையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திமுகவின் இலக்கை தெரிவிப்பதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
மாநிலத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை விளக்கியுள்ளோம். தமிழகத்துக்கு வரவேண்டிய வருவாய் குறைந்து விட்டது.
5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் இழப்பு இல்லை. 2016 -21ல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது
ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது என்றும் கூறினார்.
2011-16ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17 ஆயிரம் கோடியாகவும், 2016-21ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட 3 லட்சம் கோடி பொதுக்கடனில் 50% வருவாய் பற்றாக்குறைக்கான செலவினம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடுகையில் பொதுக்கடன் 26.69 சதவீதமாக உள்ளது.
இதுபோன்று 2021 – 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.5,70,189 கோடியாக உள்ளது
இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை/
இவ்வாறு அவர் கூறினார்.