வேலூர்: தமிழகத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் சுமார்  8 ஆயிரம் ரேஷன் கடைகளும்  விரைவில் சொந்த கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, தமிழ்நாடு  உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை தொடர் பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சக்கரபாணி தலைமையில்,  நடைபெற்றது. இதில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமை செயலாளர் முகமது நஜிமுதீன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வரவேற்றார். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ஆனந்தகுமார், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநர் ராஜாராமன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாண்மை இயக்குநர் சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த பகுதி எம்எல்ஏவும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி,  ‘‘திமுக தேர்தல் வாக்குறுதியாக குடும்பத்துக்கு 4 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப் பட்டன. இதை 99.5% மக்கள் பெற் றுள்ளனர். குடும்ப அட்டை கோரி   7 லட்சம் மனுக்கள் வரப்பெற்றுள்ளது. அதில், 3.5 லட்சம்  பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

ரேஷன் கடைகளில் தரமில்லாத அரிசி வழங்கப்படும் புகார் தொடர்பாக கடந்த ஆட்சியில் வாங்கப்பட்ட 1.50 லட்சம் டன் அரிசி இருப்பு இருக்கிறது. அதை கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டாம் என அறிவுறுத் தப்பட்டுள்ளது. தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் தமிழகம் முழுவதும் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் 8 ஆயிரம் ரேஷன் கடைகள் சொந்த கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.