ஹரித்வார்
ஹரித்வார் அருகே உள்ள ரோஷனாபாத் கிராமத்தில் உள்ள ஒலிம்பிக் வீராங்கனை வந்தனா கடாரியாவை தலித் என்பதால் கேவலம் செய்வது தொடர்கிறது.
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி வரை முன்னுக்கு வந்ததால் மிகவும் பாராட்டு பெற்றது. ஆனால் அரையிறுதியில் அர்ஜெண்டினாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. இதற்கு காரணம் அணியில் அதிக அளவில் தலித் இனத்தவர் உள்ளதால் தான் என பல ஆதிக்க சாதியினர் குறை கூறி வருகின்றனர்.
இந்த அணியின் வீராங்கனை வந்தனா கடாரியா வீட்டின் முன்பு பலரும் அவரை சாதியின் பெயரைச் சொல்லிக் குறை கூறி கோஷம் இட்டுள்ளனர். மேலும் தலித் இனத்தவரான வந்தனா தோல்வி அடைந்ததால் ஆதிக்க சாதியினர் அவரது வீட்டு முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டாடிய நிகழ்வும் நடந்ததால் அவரது பெற்றோர்கள் பயந்துள்ளனர்.
இது குறித்து அவரது பெற்றோர், ”ஒலிம்பிக் ஹாக்கி போட்டி முடிந்த உடன் எங்கள் வீட்டின் வெளியே பட்டாசு சத்தம் கேட்டது. அதனால் நாங்கள் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தோம். எங்கள் கிராமத்தில் உயர்சாதி ஆண்கள் இருவர் ஆடைகளைக் கழற்றி விட்டு எங்கள் முன்பு நடனமாடினார்கள். மேலும் அனைத்து விளையாட்டிலும் உள்ள தலித்களை விரட்ட வேண்டும் எனக் கோஷமிட்டனர்.” எனத் தெரிவித்துள்ளனர்.
வந்தனா கட்டாரியா வீட்டு முன்பு ஆடைகளைக் கழற்றி நடனமாடிய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாஜக ஆளும் ஹரித்வார் நகரில் இவ்வாறு சாதி வெறி தலை விரித்தாடுவதைக் கண்டு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.