சென்னை: தமிழகத்தில் எம்எல்சி எனப்படும் சட்டமன்ற மேலவையை கொண்டு வரும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தீர்மானம் வர இருக்கிற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.
தமிழக சட்டமன்ற மேலவை, மறைந்த அதிமுக தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சியின்போது 1986ம் ஆண்டு கலைக்கப்பட்டது. மேலவையால் கோடிக்கணக்கான ரூபாய் வீணாவதாக கூறி, மேலவையை எம்.ஜி.ஆர். ரத்து செய்தார். இதற்கான தீர்மானம், 14-5-1986ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு பின்னர் மக்களவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. அந்த காலக்கட்டத்தில், மேலவையின் தலைவராக ‘சிலம்புச்செல்வர்’ ம.பொ.சிவஞானம் இருந்தார். மேலவை எதிர்க் கட்சித் தலைவராக மு.கருணாநிதி இருந்தார்.
பின்னர் 1989ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபின் மீண்டும் மேலவையைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி முயற்சி மேற்கொண்டார். அவருக்கு துணையாக அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கும் உதவினார். ஆனால், நிறைவேறாமல் போனது. பின்னர், 1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி-சந்திரசேகர் கூட்டணியால் திமுக அரசு கலைக்கப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் மேலவை ரத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மேலவை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது நிறைவேறவில்லை.
தற்போது 10ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், மீண்டும் சட்டமன்ற மேலவையை கொண்டு வருவதற்கான முயற்சிகளை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள், மூத்த அரசியல் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வரும் 13ந்தேதி தொடங்கப்பட உள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், சட்டமன்ற மேலவை கொண்டு வருவது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, இந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன்பிறகே, தமிழ்நாட்டில் மேலவை அமைக்கப்படும்.