சென்னை

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஆசி பெற்றார்.

 

தற்போது டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவில் இருந்து 100க்கும் அதிகமான வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.  இந்தியாவின் சார்பில் வாள்வீச்சு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி பங்கேற்றார்.  அவர் இரண்டாம் சுற்று வரை முன்னேறி பிரான்ஸ் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.

சென்னை திரும்பிய பவானி தேவி நேற்று  முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைத் தலைமைச் செயலகத்தில் தனது தாயாருடன் சென்று சந்தித்துள்ளார்.  அதன் பிறகு பவானி தேவி தனது சந்திப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பவானி தேவி, ”தமிழக முதல்வர் ஒலிம்பிக் போட்டிகளில் நாங்கள் விளையாடியதைப் பார்த்துள்ளார்.   நாங்கள் நன்கு விளையாடியதாகப் பாராட்டினார்.  இந்த போட்டியில் கலந்து கொள்ளும் முன்பே அவர் எங்களுடன் கலந்துரையாடி எங்களுக்குத் தேவையானதைச் செய்வதாக தெரிவித்துள்ளார்.

நான் இந்தியாவில் முதல் முறையாக வாள் வீச்சு போட்டியில் கலந்துக் கொண்டதற்கும் என தாய் எனக்கு உறுதுணையாக இருந்ததற்கும் முதல்வர் பாராட்டினார்.  நான் ஒலிம்பிக்கில் பயன்படுத்திய வாளை அவருக்கு பரிசளித்தேன்.  ஆனால் அடுத்த ஒலிம்பிக்கில் நான் நன்கு விளையாட இந்த வாள் தேவை என ஆசி வழங்கி அவர் எனக்கே அதைத் திருப்பி அளித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

Pic courtesy : Twitter