சென்னை: பிரபல மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம், அவர்களில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.
பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா. இவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடியிருந்து வந்தார். இவரை கூலிப்படையினர் கடந்த 2013ம ஆண்டு பட்டப்பகலில் வெட்டி கொலை செய்தனர். மக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்தனர். அதையடுத்து நடத்திய விசாரணையில்,க ன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியிலுள்ள 2.25 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக, கூலிப்படையினர் மூலம் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 10 பேரை கைது செய்திருந்தனர். இன்று காலை வழக்கு விசாரணையின்போது, கைதான 10 பேரில் ஐயப்பன் சரணடைந்த நிலையில் மற்ற 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதையடுத்து தீர்ப்பு வாசிக்கப்பட்டது. தீர்ப்பில், குற்றவாளிகளான பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்லப்பிராகாஷ் ஆகிய 7 பேருக்கு தூக்கு தண்டனையும், மேரி புஸ்பம், யேசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து, முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனைகளை எதிர்த்து குற்றவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும், அங்கு தண்டனை உறுதியானால், உச்சநீதிமன்றம் வரை செல்லவும் செய்ய வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.