டில்லி
ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று பெகாசஸ் விவகாரம் குறித்து அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளன.
இந்தியாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த பிரச்சினையால் நாடாளுமன்றத்தில் அமளிகள் நடப்பதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரணை நடத்தச் சிறப்புக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி பலரும் மனு அளித்துள்ளனர்.
இந்த மனுக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் ஆகியோரால் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 30 ஆம் தேதி இந்த மனுக்களை அவசர மனுவாக விசாரிக்கப் பத்திரிகையாளர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளார். அதன்படி பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்த அனைத்து மனுக்களையும் வரும் 5 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.