சென்னை:
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வில், முதனிலை தேர்வு எழுதியவர்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை, பதிவேற்றம் செய்ய அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தேர்வாணையத்தால் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான முதனிலை தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதியவர்களில், தமிழ் வழியில் படித்ததாக விண்ணப்பத்தில் தெரிவித்தவர்கள், அதற்கான சான்றிதழ்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்வாணைய இணையதளத்தில் அதற்கான படிவம், ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வெளியிடப்படும். அதில், முதல் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை; பிளஸ் 1, பிளஸ் 2, அல்லது பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு ஆகியவற்றில், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை, ‘ஸ்கேன்’ செய்து, வரும் 16ம் தேதி முதல், செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி வரை, வேலை நாட்களில், அரசு, ‘இ – சேவை’ மையங்கள் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.இது குறித்த தகவல், எஸ்.எம்.எஸ்., மற்றும் ‘இ – மெயில்’ வழியாக தெரிவிக்கப்படும்.
தேர்வாணைய இணையதளம் வழியாகவும், இது குறித்த குறிப்பாணையை, 5ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை என்றால், அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது