சென்னை:
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக கல்லீரல் அழற்சி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு நல மருத்துவமனையில், கருவில் உள்ள குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, கன்னியாகுமரி, ஈரோடு, கடலூர், கோவை மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவை நிச்சயம் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும், அதேநேரம் பொதுமக்கள் முககவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார். பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ற்போது கொரோனா தொற்று சற்று அதிகரித்துவரும் சூழலில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான கால நீட்டிப்பு குறித்து முதல்-அமைச்சர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.