சென்னை:
சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 21-ஆம் தேதி சிறைத்துறை அமைச்சர் ரகுபதி வேலூர் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன், நளினி, சாந்தன் உட்பட அனைத்து கைதிகளையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். இந்நிலையில், முருகன், நளினி இருவரும் தங்களுக்கு நீண்டநாள் விடுப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டனர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், நீண்ட நாட்கள் விடுப்பு வழங்குவது குறித்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து பெற்றுக்கொண்டால் அதனைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நளினி, முருகனுக்கு பரோல் அளிக்கப்படுமா? என்பது குறித்து செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், உரியக் காரணங்கள் அடிப்படையில் மனு செய்தால் நளினி, முருகனுக்கு பரோல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.