சென்னை: சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் கூறவில்லை; மதத்தின் பெயரை மனிதன் தவறாக பயன்படுத்துகிறான்  என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தின் பல பகுதிகளில், சாலைகள், அரசு நிலங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்து  வழிபாட்டு தலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், சாலை குறுகியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு கோவில்கள், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி  அகற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு வசிக்கும்  சென்னை ஓட்டேரி பகுதியில் நடைப்பாதைகளை மற்றும் சாலையை ஆக்கிரமித்து  பல கோவில்கள் அமைந்துள்ளன. தற்போது அந்த பகுதியில் மினி பஸ் போக்குவரத்தும் நடைபெற்று வருவதால், கடுமையான வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்களை அப்புறப்படுத்த  அரசுக்கு உத்தரவிட வேண்டும் அமைக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் கடைகளை அகற்ற கோரி தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போது, சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்கள், அனுமதி பெறா சாலையோர கடைகள் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதை பார்த்து பதிவு செய்த நீதிபதிகள், சாலைகளை ஆக்கிரமித்துதான் வழிபாட்டுத்தலங்களை கட்ட வேண்டும் என எந்த மதக்கடவுளும் மனிதனிடம் கேட்பதில்லை. ஆனாலும் மதத்தின் பெயரை எந்தெந்த வகையிலெல்லாம் தவறாக பயன்படுத்த முடியுமோ, அந்த வகையிலெல்லாம் மனிதர்கள் பயன்படுத்திவிடுகின்றனர் என வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து, மனுதாரின் புகார் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.