இந்திய வங்கிகளில் வாங்கிய 9000 கோடி ரூபாய் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய தொழிலதிபர் விஜய் மல்லைய்யாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கடனை ஐடிபிஐ வங்கி திரும்பப் பெற்றிருப்பதாகக் கூறியிருக்கிறது.

இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் விஜய் மல்லைய்யா “கடனை திரும்பிச் செலுத்திய பின்பும் என்னை கடன்காரன் என்று வங்கிகள் சொல்கிறது” என்று கூறியிருக்கிறார்.

2021 – 22 ம் ஆண்டின் முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கையை நேற்று சமர்ப்பித்துள்ள ஐடிபிஐ வங்கி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடமிருந்து 278 கோடி ரூபாய் அசலையும் ரூ. 331 கோடி வட்டியையும் சேர்த்து மொத்தம் 753 கோடி ரூபாய் கடனை வசூலித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

இந்தக் காலாண்டில் மட்டும் 603 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து ஐடிபிஐ வங்கியின் மொத்த லாபம் 318 சதவீத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

இதன்மூலம் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஐடிபிஐ வங்கிக்கு வரவேண்டிய நிலுவைக் கடன் மொத்தமும் மீட்கப்பட்டதாக அவ்வங்கி அறிவித்துள்ளது.