கதைச் சுருக்கம் :
இது முழுக்க முழுக்க குத்துச்சண்டை மற்றும் அதை தம் இனத்தின் மானத்தைப்போலக் காத்து வந்த பரம்பரைகளைப் பற்றிய ஒரு படம்.
கபிலன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்யா சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்தவர், அவர் ஒரு குத்துச்சண்டை பிரியர். அவர் தாய் அனுபமா, அதற்க்கு முழு எதிர்ப்பு தெரிவிப்பவர். காரணம், தன் கணவர் குத்துச்சண்டை வீரராக இருந்து, பின் அடியாளாக மாறி இறந்தவர். தம் மகனுக்கும் அதே கதி நேரிடுமோ என்ற அச்சம்.
சார்பட்டா பரம்பரையின் பயிற்சியாளர் பசுபதி (ரங்கன் வாத்தியார்), இடியாப்ப பரம்பரையின் பயிற்சியாளர் GM சுந்தர் (துரைக்கண்ணு வாத்தியார்). பல ஆண்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் மோதி ரங்கன் வாத்தியார் வெற்றிபெற்றதாகவும் அதிலிருந்து துரைக்கண்ணு வாத்தியார் இடியாப்ப பரம்பரையை வெற்றியடையச் செய்ய பாடுபட்டு ஜான் கொக்கின் (வேம்புலி) என்ற குத்துச்சண்டை வீரனை தயார் செய்துவருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக இடியாப்ப பரம்பரையே வென்றுவருகிறது. படத்தில் வரும் முதல் குத்துச்சண்டை போட்டியில் வேம்புலி சார்பட்டா பரம்பரையின் மீரானை வீழ்த்திய பிறகு ரங்கன் வாத்தியாரை சபையிலேயே அவமதிக்கிறார்கள் . ரங்கன் வாத்தியாரும் அடுத்த போட்டியில் சார்பட்டா பரம்பரை வெற்றிபெறும் என்றும், அப்படி இன்றி தோற்றால் சார்பட்டா பரம்பரை இனி எந்த போட்டியிலும் கலந்துகொள்ளாது என்றும் வாக்கு கொடுக்கிறார்.
கபிலன் தம் பரம்பரை ஜெயிக்க வைக்க ரங்கன் வாத்தியாருக்கு எப்படி உதவுகிறார், அதில் எவ்வளவு இன்னல்களை எதிரிகளிடம் இருந்தும் தம் சொந்த பரம்பரையை சேர்ந்தவர்களிடமிருந்தும் சந்திக்கிறார் என்பதே மீதிக் கதை. பெரும்பாலான பா. ரஞ்சித் படங்களில் நடித்துவரும் “கலையரசன்” ரங்கன் வாத்தியார் மகன் வெற்றியாக படத்தில் தோன்றி அசத்துகிறார்.
ஆர்யாவின் உழைப்பு உடல் அளவில் மட்டுமின்றி நடிப்பிலும் நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. பசுபதி, கேட்கவே வேண்டாம், அவர் நடிப்பில் நவரசங்களையும் வெளிப்படுத்திகிறார்.
முதல் காட்சியில் அவர் தம் தோளில் உள்ள துண்டை கர்வமாக தடவும் போதும் சரி, அதே துண்டை மீரான் வெண்புலியிடம் அடி வாங்கும் போது பந்தய களத்தில் போட்டு… போட்டியில் தோற்றதை ஒப்புக்கொள்ளும் போதும் சரி, அவர் முக பாவம் பிரமாதம்.
குத்துச்சண்டை வீரர் டான்சிங் ரோசாக வரும் ஷபீர் மக்களிடத்தே பெரும் வரவேற்புப் பெற்றுள்ளார். ஆர்யாவின் மனைவியாக வரும் துஷரா, மாரியம்மா என்ற கதாபாத்திரத்திலும், ஜான் விஜய் டாடி என்ற கதாபாத்திரத்திலும் வந்து ஆர்யாவுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். ஆர்யாவின் அம்மாவாக வரும் அனுபமாவும் நடிப்பில் கலங்கடிக்கவைக்கிறார். தன் மகன் தோற்றுவிடவேண்டும் என்று மேரி மாதவிடம் வேண்டும் போதும், அதே மகன் வெற்றிபெற்ற பிறகு அடுத்த நாள் திருவிழா போல திரண்டுவரும் மக்கள் கூட்டத்தில் ஆர்யாவை “உண்ணலாம் திருத்தமுடியாது” என்பது போல் பார்க்கும் போதும் நமக்கு வாய் விட்டு சிரிக்கத்தான் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் “a known enemy is better than an unknown friend” என்று கூறுவார்கள். வறுமையிலிருந்து வெளியே வரவும் பரம்பரை மானத்தை காக்கவும் குத்துச்சண்டை உதவினாலும்..அதன் வெற்றி தெரியாத தீய பழக்கங்களை கூட அழைத்துவர வாய்ப்புள்ளதோ என்று அம்மா அஞ்சுவது இயற்கைதானே.
ஒளிப்பதிவாளர் முரளி G, குத்துச்சண்டையை ஒருங்கிணைத்து படமாக்க உதவிய அன்பரீவ், கலை T ராமலிங்கம், உடை அலங்காரம் ஏகன் ஏகாம்பரம், இசை சந்தோஷ் நாராயணன், எடிட்டிங் செல்வா RK போன்ற எண்ணிலடங்கா திரைக்கு பின் திறமையை வெளிக்காட்டியவர்களை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.
இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களின் கிரீடத்தில் மேலும் மெருகூட்டக்கூடிய நவரத்தினங்களை பதிக்கும் படமாக இது அமைந்துள்ளது. நன்கு ஆராய்ந்து எழுதப்பட்ட கதைக்களம், சிறந்த நடிகர்கள் கொட்டிதள்ளிய சீரான நடிப்பு, 70 களில் வட சென்னையின் சூழல் போன்ற அனைத்தும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் சேர்ந்துவிடுகிறது.
பத்திரிகை டாட் காமின் மதிப்பெண்கள்: 3.5/5