சென்னை: கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு “தகைசால் தமிழர்” விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுஉள்ளார். இந்த விருது ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத்தினத்தன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

”தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் மகத்தான, “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டு இருப்பதாக நேற்று (27ந்தேதி) தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, தகைசால் தமிழர் விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு, தமிழக முதல்வர் தலைமையில், தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி,  ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் நபருக்க ”தகைசால் தமிழர்” விருது வழங்கப்படும் என்றும், விருதுடன்   பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திர தின விழாவின்போது, முதல்வர் கையால் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான  100 வயதுடைய என்.சங்கரய்யாவுக்கு  “தகைசால் தமிழர்” விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இந்த விருதானது, வரும் ஆகஸ்டு 15ந்தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவின்போது,  முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், இந்த விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.

இவ்விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவைப் பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

‘தகைசால் தமிழர்’ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.சங்கரய்யாவுக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.