சென்னை: தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு மத்திய மாநில அரசுகளால் இலவசமாக போடப்பட்டு வருகிறது. அதே வேளையில், தனியார் மருத்துவமனைகள் பணத்துக்கு போட்டு வருகிறது. முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ரூ.250 விலையில் தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடர்ந்து அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தின்படி, தமிழ்நாட்டுக்கு 20.32 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 14.22 லட்சம் தடுப்பூசிகள் கட்டண அடிப்படையில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள தடுப்பூசிகளையும் பயன்படுத்தி பொதுமக்களுக்கு இலவசமாக விரைந்து தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்தது. அதன்படி, தனியார் மருத்துவமனைகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடவும், பெரு நிறுவனங்கள் பங்களிக்கும் சமூக பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) கொண்டு தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டமும் தமிழகத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 6 தனியார் நிறுவனங்கள் 2.37 கோடி ரூபாயில் 36,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை சென்னையில் ஆழ்வார்பேட்டை காவிரி மருத்துவமனையில் அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் சிஎஸ்ஆர் நிதியில் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துளள்ளார். தொடர்ந்து நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுபோன்ற திட்டம் நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.