பெங்களூரு: கர்நாடக முதல்வராக பதவி வகித்து வந்த எடியூரப்பா ராஜினாமாவைத்தொடர்ந்து, புதிய சட்டமன்ற கட்சித்தலைவர் தேர்வு இன்று இரவு நடைபெறுகிறது. பாஜக மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தேர்வு செய்யப்படும் நபர் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்பார்.
கர்நாடக மாநிலத்தில் 4முறை முதல்வராக பதவி வகித்தவர் எடியூரப்பா. இவர்மீது சக அமைச்சர்களும், எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவித்து, போர்க்கொடி தூக்கியதால், 2 ஆண்டுகள் ஆட்சி நடத்திய எடியூரப்பாக மேலிடத்தின் வற்புறுத்ததால் தனது முதல்வர்பதவியை ராஜினாமா செய்தார். முதல்வராக பதவி ஏற்ற எடியூரப்பா அந்த பதவியில் இரண்டாண்டுகளை நிறைவு செய்த தினமான நேற்று (ஜூலை 26ந்தேதி) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர் தாவர் சந்த் கெலாட், எடியூரப்பாவின் அமைச்சரவையையும் கலைத்து, புதிய முதலமைச்சரை தேர்வு செய்யுமாறு பாஜகவுக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூரில் இன்று இரவு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை மேற்பார்வையிட பாஜக மேலிட பார்வையாளர்களாக, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி ஆகியோர் பெங்களூரு வருகை தந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில், இன்று இரவு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பாஜக கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
பாஜக சார்பில் முதல்வர் பதவிக்கான போட்டியில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பு செயலர் பி.எல்.சந்தோஷ், தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி (ஒரு வோகாலிகர்) அமைச்சர் முருகேஷ் நிரானி உள்பட சிலர் இருப்பதாகவும், ஆனால், எம்எல்ஏக்களின் ஒருமித்த ஆதரவு உள்ள ஒருவரே சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், கர்நாடகாவில், எடியூரப்பாவின் ஜாதியான லிக்காயத் மடாதிபதிகள் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து விலகச்செய்ததற்கு பாஜக தலைமயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான கர்நாடக பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு பெங்களூருவில் நடைபெற உள்ளது.