சென்னை: வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினர் 7%, இதர மிகவும் பிறப்படுத்தப்பட்டோருக்கு 2.5% சிறப்பு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசாணையை வெளியிடப்பட்டு உள்ளது.
வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளேன். அனைத்து கல்விச் சேர்க்கைகளும் புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இன்று காலை உயர்நீதி மன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர் பாலு. தமிழகத்தில் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பில் வன்னியர் பிரிவுக்கு 10.5 விழுக்காடு பற்றிய அறிவிப்பு இல்லாதது வன்னியர்களுக்கு ஏமாற்றமளிக்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கித் தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது.
அச்சட்டத்தின் அடிப்படையில், அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச் சுழற்சி முறையைத் திருத்தி அமைக்க, சட்ட வல்லுனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் உறுதி அளித்திருந்தார். அதன்படி, சட்ட வல்லுநர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை இன்று வெளியிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
இது மட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்விச் சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.