நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
‘சினிமாவில் குறியீடு. இப்பவெல்லாம் ஜுஜுபி..
சினிமாவில் அரசியலை திணித்து பேசுவது என்பது இன்று நேற்று நடப்பதல்ல.. என்றாலும் தகவல் தொழில் நுட்பம் வளர ஆரம்பித்த 1990களின் துவக்கத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள்தான் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தன..
காரணம் மீடியாக்களின் தாக்கம் அப்படி.. ஜெயலலிதா, ரஜினி இடையே ஏற்பட்ட மோதலே பிள்ளையார் சுழி..
1991-ல் முதன் முறையாக முதலமைச்சரான ஜெயலலிதாவிற்கு ராஜீவ்காந்தி படுகொலையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டன.
ஜெயலலிதா வசித்த அதே போயஸ்தோட்டத்தில்தான் ரஜினியின் வீடும். ஒவ்வொரு முறை வெளியே போகும்போதும் வரும்போதும் ரஜினியின் கார் நிறுத்தப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டது.
இதில் ரொம்பவே கடுப்பானார் ரஜினி.. இருவருக்கும் இடையே மோதல் வெடித்து பரபரப்புடன் செய்தியாக பரவியது..
இதனைத்தொடர்ந்து அண்ணாமலை படத்தில் வினுசக்கரவர்த்தியை எம்எல்ஏவாக சித்தரித்து, ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி வாயிலிருந்து வசனங்கள் அனலாய் கொட்டின.
என் பாட்டுக்கு என் வேலையை பார்த்துட்டு நான் சிவனேன்னு ஒரு வழியில போய்கிட்டு இருக்கேன்.. என்னை வம்புக்கு இழுத்தா…நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன் என்கிற வசனம் டைரக்ட் அட்டாக்காவே இருந்தது.
சிறிது காலத்தில் இரண்டு தரப்புமே சாந்தமாகிப்போய்விட்டது. ஆனால் பாட்சா வெற்றிவிழாவில் பேசிய ரஜினி, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் என்று சொல்லப்போக மறுபடியும் உரசல்.
ஜெயலலிதா தரப்பில் உஷ்ணத்தை காட்ட, 1995 தீபாவளிக்கு வந்த முத்து படத்தில் ஹீரோயின் மீனாவின் ரோல் திமிர் பிடித்து அலைவதுபோலவும் அதற்கு ரஜினி பதிலடி கொடுப்பதுபோலவும் சீன்கள் வைத்து வெளுத்தனர்.
கீழே உட்கார்ந்துட்டு எது வேண்ணா பேசலாம். மேடையேறிப்பாரு தெரியும்’ என்று சொல்லும் ரங்கநாயகிக்கு, நமக்கெதுக்கு அது வேண்டாத வேலை. நான் பாட்டுக்கு இங்கே இருக்கேன்’ என்று ரஜினி பாத்திரம் சொல்லும்..
இதே படத்தில்தான், ‘நான் எப்ப வருவேன்… எப்படி வருவே?ன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்’ என்ற ரஜினியின் அரசியல் பஞ்ச் வசனம் இடம் பெற்றது. இதுவே 1961-தாய்சொல்லை தட்டாதே படத்தில் எம்ஜிஆர் பேசிய வசனத்தின் உல்டா என்பது வேறுவிஷயம்.
முத்துக்கு பிறகு, படையப்பாவில் திமிரின் உச்சமாய், நீலாம்பரி என்ற பாத்திரம். உண்மையான நீலாம்பரி யார் என்பது ரசிகர்களுக்கு புரியும் என்பதால், ‘’அதிகமாக ஆசைப்படற ஆம்பளையும் அதிகமாக கோபப்படற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது’’ என்று டயலாக் பேசி ரஜினி விபூதியடித்தார்.
அரசியல் குறியீடுகளை வைத்து படத்தில் கும்மாங்குத்து விடுகிற வரலாற்றை ஆராய்ந்தால் அது ஊமைப்படக்காலத்தில் போய் நிற்கும்.. திரையில் காட்சி ஓடும்போது அதற்கு விளக்கம் கொடுப்பவர்கள்,
சூழலுக்கு ஏற்ற மாதிரி ரசிகர்களுக்கு அரசியலையும் சமூக பிரச்சினைகளையும் நாசூக்காக கோர்த்துவிடுவார்கள்.
பேசும் படங்கள் வந்தபிறகு சுதந்திர வேட்கையில் 1947வரை பிரிட்டிஷ்காரனை எப்படியெல்லாம் கொத்து கறி போடமுடியுமோ அதற்கேற்ப நாசூக்காக சீன்கள் அமைத்து சினிமாவை ஓடவிட்டார்கள்.
ஆனால் திராவிட தலைகள் சினிமா உலகில் நுழைந்தபிறகுதான், இந்த குறியீடு தாக்குதல்கள் பெரும் போராகவே மாறிப்போயின..
சுதந்திரம் கிடைத்து நாட்டின் மகுடம் காங்கிரஸ் வசம் போகப்போகிறது என்பது உறுதியானவுடனேயே காங்கிரஸ் தலைவர்கள், வசனங்களில் வறுபட்டார்கள்.
பல படங்களில் நடித்து இரண்டாவது கதாநாயகனாக முன்னேறியிருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர், முதன் முதலில் கதாநாயகனாக படம் ராஜகுமாரி.
நாடு சுதந்திரம் அடைவதற்கு சில மாதங்களுக்குமுன்பு வந்த படம் ராஜகுமாரி. வசன கர்த்தா கலைஞர்
கலைஞருக்கு வசனகர்த்தா என்ற வகையில் முதல்படம்.. வசனம் எழுதிய கலைஞர் கச்சிதமாய் ஆரம்பித்து வைத்தார்.
நாட்டு நிலைமைபற்றி மன்னன் கேட்கும்போது தளபதி சொல்வார், ‘’ நாட்டில் நடப்பது ராமராஜ்யம் என்று சொல்கிறார்கள். மக்களுக்கு உங்கள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை. அரிச்சந்திர மஹாராஜாவின் அடுத்த அவதாரம் என்றே உங்களை கருதுகிறார்கள்’’
ராமராஜ்யம், அரிச்சந்திரன் போன்ற வார்த்தைகளெல்லாம் யாரை அட்டாக் செய்தன? சாட்சாத் மகாத்மா காந்தியை அல்ல என்று சொன்னால் யார் நம்பப்போகிறார்கள்?
கலைஞரின் குருநாதர் அறிஞர் அண்ணா நல்லதம்பி, வேலைக்காரி போன்ற படங்களில் நேருவின் சோஷலித்தை சுழட்டியடித்தார்.
பதிலுக்கு அண்ணாவும் கலைஞரும் அதே சினிமாவில் விளாசப்பட்டனர்.
நம்பியார் கதாநாயகனாக நடித்த நல்ல தங்கை (1955) என்ற படத்தில், ஒரு வேலைக்காரன் அவனது உண்மையான பெயரை கேட்டால் அதை சொல்லாமல்,
‘’அதை ஏன் கேக்கறீங்க, என் பேர வெச்சிருக்கிற இன்னொரு பய ஊர்ல கெடக்கான். அவன் அர்த்தம் இல்லாம பேசறான்ங்க.. அடாவடிக்கெல்லாம் போறான்ங்க..
அவனுக்கு ஒன்னுமே தெரியாமபோனாலும் ஒலகத்தை பத்தி என்னென்னமோ உதர்றான். கதர்றான்.. அவன்னு நெனச்சிகிட்டு எனக்கு பொண்ணு குடுக்கமாட்டேன்றாங்க..’’
– இந்த வசனத்தை பேசும் நடிகரின் பெயர் என்ன தெரியுமா? ஏ.கருணாநிதி.
அண்ணா இங்லீஸில் அடிக்கடி விளாசுவதையும் அதே படத்தில் குறியீடெல்லாம் இல்லாமல் அவர் பெயரை சொல்லி நேரடியாகவே நக்கலடித்தார்கள்.
இங்லீஷில் மேதையாக காட்டிக்கொள்ளும் அண்ணாவுக்கு, Yes என்றால் இல்லையென்றும் No என்றால் ஆம் என்று அர்த்தம் சொல்லுமளவிற்குத்தான் அறிவு என்று பாட்டாகவே பாடி விளாசினார்கள்
1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகுதான் திரைப்படங்களில் குறியீடு அட்டாக் வேகம் பிடித்தது.. வில்லன்கள் காங்கிரஸ் பண்ணையார்களாகவும் பெருமுதலாளிகளாகவுமே சித்தரிக்கப்பட்டனர்.
கும்பி எரியுது. குடல் கருகுது கோலேசா உனக்கு ஆட்சி ஒரு கேடா என்று காமராஜரை வறுத்தெடுத்த திமுக மேடைப்பேச்சை, அரச கட்டளை (1967) படத்தில் எம்ஜிஆர் அப்படியே வசனமாக வைத்தார்.
பொய்யும் புரட்டும் துணையா கொண்டு பிழைத்தவங்கெல்லாம் போனாங்க..மூலைக்கு மூலைக்கு தூக்கி அடிச்சோம் தலைகுனிவாக ஆனாங்க என்று பாட்டில் வரிகளை வைத்து, காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் புதைக்கப்பட்டதை கொண்டாடி தீர்த்தது எம்ஜிஆரின் நம்நாடு (1969) படம்.
எம்ஜிஆர் திமுகவிலிந்து நீக்கப்பட்ட பிறகு சினிமாக்களில் குறியீடு தாக்குதல் ஜெட்வேகம் பிடித்தது. இம்முறை கோதாவில் காங்கிரஸ் சார்பில் நடிகர் திலகமும் சேர்ந்துகொண்டார்
கருணாநிதி ஆட்சிக்கு எதிராக,
”நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்”
என்று எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்ற பாட்டில் ஓடவிட்டு ரத்தத்தின் ரத்தங்களை முறுக்கேற்றினார்.
என் மகன் (1974) படத்தில், கலைஞர் எம்ஜிஆர் ஆகிய இருவரையும் பார்த்து நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் என்று சிவாஜி பளார் பளார் என விடுவார்.
சதிகார கூட்டம் ஒன்று சபையேறக்கண்டேன்..
என்றைக்கும் மேலிடத்தில் (டெல்லி) இவர் மீது நோட்டம் என்றெல்லாம் கலைஞரையும் எம்ஜிஆரையும் சிவாஜி பிரித்து மேய்ந்தார்.
எம்ஜிஆர் அண்ணாயிசம் என்று கொள்கை பேசியதும், தங்கப்பதக்கம் (1974 படத்தில் சோவை வைத்து அப்பாயிசம் என நார்நாறாய் கிழித்தார் சிவாஜி.
‘’இரைகளை விரும்பி இரவு பகல்
சில பறவைகள் அலையும் காட்டிலே
அந்த பறவைகள் இனத்தில் பிறந்ததுபோல்
‘சிலர் பதவிக்கு அலைவார் நாட்டிலே’’
என எம்ஜிஆர் முதலமைச்சர் பதவிக்கு அலைவதாக டாக்டர் சிவா படத்தில் நேரடியாகவே அட்டாக் செய்தார் சிவாஜி.
‘’கூடவே இருந்தவனை காரியம் முடிஞ்சதும் கேள்வி கேட்டான்னு அவனை கொல்லப்பாத்தீயே?’’ன்னு நாளை நமதே படத்தில் நம்பியாரை பார்த்து எம்ஜிஆரு கேட்பார்… அவர் நம்பியாரைத்தான் கேட்கிறார் என்று ஒரு ரசிகனும் நம்ப மாட்டான்..
கண்ட கண்ட உரங்களை போட்டு
காய்கறிய வளர்க்கிறான்.
அந்த உரத்தில்கூட ஊழல்
பண்ணி எங்க பேரை கெடுக்கறான்..
என்று கலைஞர் அரசின் உரபேர விவகாரம் நீதிக்கு தலைவணங்கு படத்தில் ஒரு சமையல்காரன் பாத்திரத்தில் எம்ஜிஆரே சூடாக வேகவைத்தார்.
70-களில் நடந்த இந்தே பாடல் வசன மோதல்கள் அனைத்தும் பெரிய புத்தகமே எழுதும் அளவுக்கு இருக்கும்
முதலமைச்சராக இருந்த கலைஞர், எதிர்கட்சியானதும் மீண்டும் தன் வேலையை துவக்கினார்.
எழுபதுகளின் இறுதியில் ஆரம்பித்து வண்டிக்காரன் மகன், ஆடுபாம்பே தூக்கு மேடை என வரிசையாக படங்களை சொந்தபேனரில் எடுத்து எம்ஜிஆரை வறுத்தெடுத்தார்.
ஆடும்வரை ஆடுபாம்பே,
பலவேஷம் போட்ட குட்டிம்பாம்பே..
அதிகாரம் கொண்ட பாம்பே
அகங்காரம் கொண்ட கெட்ட பாம்பே..
என்றெல்லாம் ஜெய்சங்கரை வைத்து பாடவைத்து உடன்பிறப்புகளுக்கு தியேட்டர்களில் உற்சாகமூட்டினார்.
கலைஞரின் உச்சகட்ட அட்டாக், 1986 பாலைவன ரோஜாக்கள் படத்தில்தான்.
குடித்துவிட்டு கிடக்கும் ரிக்சாக்காரனை பார்த்து உதயசூரியன் சின்னம் பின்னணியில் உள்ள ஹீரோ சொல்வார்.. காலங்காத்தால தண்ணியடிச்சிட்டு படுத்திருந்தேன்னா உன்னை மந்திரி ஆக்கினாலும் ஆக்கிடுவாங்க என்று.
படம் முழுக்க எம்ஜிஆர் அரசை கும்மி எடுத்திருப்பார்கள்.. அதிலும் கலைஞரின் கோபம் எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு கெஸ்ட் அவுஸ் சீனே சாட்சி.
செக்கச்செவேலன நடுத்தர வயது பெண்ணை அமைச்சர் கட்டிலில் போட்டு உருட்டும்போது, பக்கத்து அறையில் அல்லக்கைகள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறமாதிரி வைக்கப்பட்ட வசனம்..
‘’என்ன அண்ணே அமைச்சரைவிட அந்தம்மாவுக்கு அதிகமா மரியாதை காட்றீங்க.’’
‘’டேய் சொல்லமுடியாதுடா நாளைக்கே இந்தம்மா எம்எல்சி ஆனாலும் ஆயிடும்’’
படம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காகவும் ஆர்எம்விக்கு செக் வைக்க ஜெயலலிதாவுக்காகவும் சட்டமேலவையையே அடியோடு எம்ஜிஆர் கலைத்தார் என விவாதங்கள் அனல் பறந்த நேரம் அது…
வெண்ணிற ஆடை நிர்மலா என்றதும் ஞாபகம் வருவது கலைஞரின் மகன் மு.க. முத்துதான். அவருடன் அதிக படங்களில் அவர்தான் நடித்தார்.
மு.க. முத்துவின் பூக்காரி படத்தில் மஞ்சுளாவை பாடவிட்டே எம்ஜிஆரை முட்டை பொடிமாஸ் போட்டார்கள்.
பூக்காரி பீச்சு பக்கம் முப்பது பைசா மூணு முழம்னு மஞ்சுளா பாடுவார். திடீர்னு அண்ணா சிலைக்கு முன்னாடி நின்னு அங்கு வர்ற பையனை பார்த்து,
நீ வாசனைப்பூவா நல்ல வாழணும் தம்பி.
சில காகிதப்பூ கண்ணை பறிக்கும் போகாதே தம்பி..
பாட்டை எழுதுனது வேற யாருமில்லை வாலியே தான்.
மு.க. முத்துவே டைரக்டா அப்பாவுக்கு சப்போர்ட் பண்ணியும் எம்ஜிஆரை அட்டாக் பண்ணியும் சொந்தக்குரலில் பாடி அணையா விளக்கு (1975) படத்தில் பள்ளிவாசம் பக்கம் குல்லா போட்டுகிட்டு எகிறினாரு.
சொல்லாட்சி சிறக்குதப்பா நீ வகுத்த ஏட்டினிலே நல்லாட்சி நடக்குதப்பா நீ இருக்கம் நாட்டினிலே
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகை பார்ப்பதில்லை
வாராத பதவிக்கெல்லாம் வாய் பிளக்கும் மனிதர் உண்டு
ஊர்குருவி சில நேரம் பருந்தென்று நினைப்பதுண்டு..
இப்படிவரிகளை போட்டு வாலி எழுதியதால் எம்ஜிஆர் காண்டாகிப்போய், புலமைப்பித்தன், நா.காமராசன் போன்ற பாடலாசிரியர்களை பெரிய அளவில் உருவாக்க ஆரம்பித்தார்..
குறியீடுகள் பத்தி மேற்கொண்டு போகலாமா வேண்டாமா என்பதை ஒரு சிறிய இடைவேளை விட்டு முடிவு செய்வோம்