டெல்லி: தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதா குறித்து வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு உள்பட பல்வேறு மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளளார்.
நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரின்போது பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்தியஅரசு உறுதி பூண்டுள்ளது. இதில், இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021 என்ற மசோதாவும் ஒன்று. இந்த மசோதா இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதா குறித்து வரும் 28-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா தெரிவித்து உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதா குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி, தமிழகம், புதுச்சேரி, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்களுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.