மாஸ்கோ:
ஷ்யாவில் லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.


ரஷ்யாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவரின் ஆடம்பர மாளிகைக்குள் அதிரடியாக சோதனை நடத்திய போது அங்கிருந்த சில பொருள்கள் மற்றும் கழிவறை ஆகியவை தங்கத்தால் ஆனது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 6 காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரி கர்னல் அலெக்ஸி சபோனோவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்திய மதிப்பில் ரூ.1.9 கோடியை அந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி கிட்டத்தட்ட பல வருடங்களாக லஞ்சமாக பெற்று வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் லஞ்ச ஒழிப்பு துறையினர் அவருடைய மாளிகைக்குள் தங்கத் தகடுகளால் பதிக்கப்பட்டிருந்த திரைச்சீலைகள், படிக்கட்டுகள், அலமாரிகள், அலங்கார பொருட்கள் உள்ளிட்டவற்றை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

அதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட அதிகாரி குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 8 முதல் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 35 போக்குவரத்து காவலர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும, அவர்களுக்கு பின்னணியில் பயங்கரமான மாஃபியா கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாகவும் ஐக்கிய ரஷியா கட்சியின் எம்பி அலெக்சாண்டர் டெலிகிராமில் கூறியுள்ளார்.