டில்லி
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தேசத் துரோக சட்டத்தை நீக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று தேச துரோக சட்டம் மற்றும் அதன் தாக்கம் குறித்த ஒரு கருத்தரங்கு நடந்தது. இந்த நிகழ்வை மனித உரிமை ஆர்வலர் அமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்த அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தி உள்ளன. இந்த நிகழ்வை ஆர்வலர்கள் அஞ்சலி பரத்வாஜ் மற்றும் பிரசாந்த் பூஷன் வழி நடத்தி உள்ளனர்.
இதில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளார். இந்த நிகழ்வில் நீதிபதிகள் மதன் லோகுர், அஃப்தாப் அலாம், அஞ்சனா பிரகாஷ் மற்றும் கோபால கவுடா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் முக்கியமாகத் தேசவிரோதம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு சட்டங்களை பாஜக அரசு பயன்படுத்துவது குறித்துப் பேசப்பட்டுள்ளது.
தீபக் குப்தா தனது உரையில், “தேசத் துரோக சட்டம் இப்போதுள்ள இதே வடிவத்தில் தொடரக்கூடாது. இதை நீக்க வேண்டும். இந்த சட்டத்தை அரசு தவறாகப் பயன்படுத்த நிறைய வாய்ப்பு உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் அளிக்கும் உரிமையை அரசு பறிக்க வாய்ப்புள்ளது. மேலும் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதி கிடைப்பதில் கடும் சிரமம் உள்ளது.
காலப்போக்கில் பல சட்டங்கள் மாற்றி அமைக்கப்படுவதும் ஒரு சில சட்டங்கள் ரத்து செய்யப்படுவதும் பல முறை நடந்துள்ளது. அதிக எதிர்ப்புக்குள்ளாகும் மற்றும் அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட சட்டங்களை அவசியம் நீக்கியாக வேண்டும்..
பெருவாரியான நீதிபதிகளுக்குத் தீவிரவாதம் மற்றும் தேசவிரோதம் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் தெரியவில்லை. தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்த விளக்கங்கள் இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக ஒரு குழப்பத் தன்மை தெரிகிறது. இவ்வாறு குழப்பத்தன்மை உள்ள சட்டங்களை நிச்சயம் தவறாகப் பயன்படுத்த முடியும்.
தேசியப் பாதுகாப்பு சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு ஆர்வலர் மற்றும் ஒரு மணிப்பூர் செய்தியாளர் ஆகியோர் கொரோனா மற்றும் பசு தொடர்பான கருத்துக்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தண்டனையை அளித்த மாவட்ட நீதிபதி அதற்கான இழப்பீட்டைத் தனது சொந்த பணத்தில் இருந்து அளிக்க வேண்டும்.
தேசத் துரோக சட்டம் என்பது ஒரு குடிமகன் அரசிடம் கேள்விகள் எழுப்பும் உரிமையை எதிர்த்து குடியரசு கொள்கைக்கு முடிவைக் கொண்டு வரக்கூடியது ஆகும். காலனி ஆட்சியின் போது இந்தியர்கள் எந்த கேள்வியும் எழுப்பாமல் இருக்கப் பயன்படுத்த இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போதைய நிலையில் இதை நீக்க வேண்டும். “ எனத் தெரிவித்துள்ளார்.