தேநீர் கவிதைகள் – 4
தேநீர் நேரம்
பா. தேவிமயில் குமார்
வடை
பழைய சோற்றை சாப்பிட
பாட்டி வடை சுட்ட
கதையை சொன்னாள்
அம்மா !
வடைலாம் கதைலதான்
வருமாம்மா ?
என்றது பிஞ்சு !
வரிசை
ஒவ்வொரு மிடறு
தேநீரும்
ஒரு நினைவை
தருகிறது !
தேநீர்
தீர்ந்த பின்
மனமும் தீர்ந்து விடுகிறது
ஞானியைப் போல !
பிரிதல்
உன்னுடன் பழகிய
நாட்களில்
பழகினேன்
தேநீர் அருந்த !
உன்னைப் பிரிந்தாலும்
இன்னும்
தேநீரைப் பிரிய மனமில்லை !
படையல்
பால் பழம் மட்டுமே
படைப்பதால
தேனீர் சுவை தெரியாத கடவுள் பாவம்தான்
அவனுக்கும்
இனி ….
தேனீர் படைப்போம்
டம்பளர்
பித்தளை டபரா
செட்டிலும்,
பிளாஸ்டிக் கப்பிலும்,
இரட்டை டம்ளரிலும்,
வண்ண டம்ளரிலும்,
தேனீரின் சுவை
தெவிட்ட வைக்கிறது……
வ(ர்)ண்ணத் திற்குள் வகைப்பாடு…….
இங்கும் உண்டு
அவையில் மட்டுமல்ல
சுவையிலும்
சு(ட்)டபடுகிறது….. சாதீ….