உலகெங்கும் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதம மந்திரிகள் மற்றும் மொரோக்கோ மன்னர் ஆகியோரது அந்தரங்கங்களை வேவு பார்த்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பல்வேறு தரப்பினர் அடங்கிய விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் ரேம் பென் பரக் தெரிவித்துள்ளார்.
என்.எஸ்.ஓ. நிறுவனம் இதற்கு முன் பல்வேறு தீவிரவாதக் குழுக்களை அடையாளம் காண உதவி இருந்தபோதும், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் விவகாரம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
விசாரணை ஆணையத்தின் அறிக்கை வந்தவுடன் அதுகுறித்த உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பின் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்த அவர், இந்த விசாரணை எப்பொழுது நிறைவுபெறும் என்று தெளிவுபடுத்தவில்லை.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் செயல் அதிகாரி ஷாலேவ் ஹுலியோ, தங்கள் நிறுவனம் உலகின் 45 நாடுகளில் உள்ள சட்டபூர்வ அரசு மற்றும் அரசுத்துறைக்கு மென்பொருளை விற்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள பல்வேறு உளவு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்தவே இந்த விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.
எங்கள் தரப்பில் எந்தவித தவறும் நிகழவில்லை, ரகசியத்தன்மை தொடர்பாக இந்த விவகாரம் குறித்து நாங்கள் வெளிப்படையாக எதையும் கூறமுடியாது.
சம்பந்தப்பட்ட அரசுகள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள நினைத்தால் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று கூறினார்.
50,000 க்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசி தரவுகள் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான நிலையில், இது அந்நாட்டு அரசுகள் வழங்கிய உத்தேச பட்டியலின் ஒரு பகுதிதான், உளவு பார்க்கப்பட்டவர்களின் பட்டியல் என்று கூறமுடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.