சென்னை:
ன்னும் 2 மாதங்களில் தமிழகத்தில் குட்கா, பான்பராக் விற்பனை இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைசர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் மாநில அளவிலான புகையிலைத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான கலந்தாய்வுக்கூட்டம், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் உள்ள எந்தக் கடைகளிலாவது தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற போதை வஸ்துகளை விற்றால் முதலில் அந்தக் கடைக்கு நோட்டீஸ் அளிக்கப்படும். இரண்டாவது அபராதம் விதிக்கப்படும். அதற்கடுத்து அந்தக் கடை மூடி சீல் வைக்கப்படும்.

இந்த போதை வஸ்துகள் இளைஞர்களை அதிகம் பாதிக்கக்கூடியவையாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகளின் வாயில்கள், பொதுமக்கள் அதிகம் கூடுகிற மார்க்கெட் போன்ற பகுதிகளில் குட்கா, பான்பராக் போன்ற பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை மனித உருவ பொம்மை வடிவில் எந்தெந்த உறுப்புகளை பாதிக்கிறது,

எவ்வாறு உயிரிழப்பு ஏற்படுகிறது என்பதை வரைந்து பொம்மைகளாக உருவாக்கி மாவட்டத்திற்கு 50 இடங்களிலாவது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது.

அதோடு மட்டுமல்லாது மாவட்டத்தில் இரண்டு, மூன்று இடங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அந்தப் பகுதியில் இருக்கிற வணிகர்களை ஒன்றிணைத்து, பொதுமக்களுக்கு சுகாதாரச் சீர்கேடுகளை ஏற்படுத்துகிற இந்த மாதிரி போதை வஸ்துகளை விற்கமாட்டோம் என்ற உறுதிமொழி எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் 2 மாதக் காலத்தில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் எங்கேயும் இதுபோன்ற போதை வஸ்துகள் விற்கப்படவில்லை என்கிற நிலையை உருவாக்குவதற்கு இந்த மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து செயலாற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

வருகிற புகையிலைத் தடுப்புத் தினத்திற்குள் இந்நிலையை ஏற்படுத்துகிற அந்தந்த மாவட்டங்களில் இருக்கிற இம்மூன்று துறைகளின் சேர்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழக முதல்வர் அளித்து சிறப்பிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு ஒரு மனநிறைவான செய்தி என்பது தடுப்பூசி செலுத்துவதில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு 2 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2,00,05,367. தமிழகத்தில் உள்ள 1,11,026 மாற்றுத்திறனாளிக்கு முழுவதுமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. 79,585 கர்ப்பிணிகளுக்கும், 73,726 பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு தடுப்பூசி பயணம் நல்ல இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறையின் கீழ் கட்டுப்பாட்டில் இருக்கிற உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுடன் மட்டும் பங்கேற்புடன் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தாமல், காவல்துறை, தமிழக அரசு உள்ளாட்சி துறை ஆகிய மூன்று துறைகளின் கீழ்
ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மாநில அளவில் மட்டுமல்லாமல், மாவட்ட, வட்டார அளவிலும் நடைபெற வேண்டும் என்று இக்கூட்டத்திலேயே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற துறையின் செயலாளர், தனி அலுவலர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடத்தில் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள். மாவட்ட ஆட்சியர்கள் இந்த மூன்று துறைகளின் சார்பில் ஒருங்கிணைப்பு
கமிட்டி அமைத்து செயல்படுவார்கள். வார இதழ் ஒன்றில் குட்கா, பான்பராக் போன்ற போதை வஸ்துகள் தாராளமாக கிடைக்கின்றன என்று வந்த செய்தியின் அடிப்படையில் அதைத் தடுப்பதற்காக புகையிலை இல்லாத தமிழகத்தை மாற்ற இந்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்திலாவது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காத அந்த அதிகாரிகளின்மீதும் நடவடிக்கை எடுப்போம். போதை வஸ்துகள் விற்கப்படும் தவறுகளை யார் செய்திருந்தாலும்
தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

யாராவது இந்த போதை வஸ்துகள் விற்பதைப் பற்றி தகவல் கொடுத்தால், தவறு செய்தவர்களின் விவரங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அவர்கள்மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தகவல் அளித்தவர்களின் விரவங்கள் ரகசியமாக வைக்கப்படும். இந்த புகார்களை தெரிவிக்க ஏற்கெனவே வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வாட்ஸ் அப் எண் 9444042322.

குட்கா, பான்பராக் போன்ற போதை வஸ்துகள் உற்பத்தி செய்யப்படுவது குறித்து தகவல் அளித்தால் அவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.