டெல்லி: வடமேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா உள்பட வடமாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்ட தகவலின்படி, வங்கக் கடலில் நாளை மறு நாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதனால், அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முன்கூட்டியே வடமேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதனால், தெற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும். வடமேற்கு, வட தில்லி, ஜிந்த், ரோஹ்தக், கைதால், ரேவாரி, பவல், திசாரா, கஸ்கஞ்ச், பரத்பூர், நாட்பாய், பர்சனா போன்ற பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
மேலும், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரம் மாநிலத்திற்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.