திருச்சி
திருச்சி அருகில் உள்ள ஒரு சாமியார் பேசியதாக வெளியான ஆடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாலா சாமிகள் மற்றும் தேஜஸ் சாமிகள் என அழைக்கப்படும் பாலசுப்ரமணியம் திருச்சி மாவட்டம் அல்லித் துறையைச் சேர்ந்தவர் ஆவார். இந்த சாமியார் கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா, ஒத்தக்கடையில் தக்ஷிண காளி என்ற காளி கோவிலைக் கட்டி வழிபாடு நடத்துவதுடன் அங்கு வரும் பக்தர்களுக்குக் குறிசொல்லி வருகிறார்.
சமீபத்தில் அவர் பேசியதாக ஆடியோஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலசுப்ரமணியன், அந்த ஆடியோவில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகக் கூறுகிறார்.
அத்துடன் தமிழகம் முழுவதும் 42 ரவுடிகள் என்கவுண்டர் பட்டியலில் உள்ளதாகவும் அதில் 12 பேர் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் உங்களுக்குத் தெரிந்த ரவுடியை பத்திரமாக இருக்குமாறும் எதிர்த் தரப்பில் பேசும் வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்குகிறார்.
மேலும் தாம் தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு நேரில் சென்று வந்ததாகவும் அமைச்சர்கள் பலரும் தன்னிடம் ஜோசியம் கேட்பதற்காக வந்து செல்வதாகவும் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ வெளியாகி வைரலாகியது.
இதனால் சாமியார் பாலசுப்ரமணியத்திடம் ஜீயபுரம் டி எஸ் பி செந்தில்குமார், விசாரணை நடத்தினார். மேலும் காவல்துறை ஆணையரின் தனிப்படை போலீசார் சாமியாரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலசுப்பிரமணியம், ஜெயக்குமார் என்னும் ஜெய், வழக்கறிஞர் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் யாரோ விஷமிகள் சிலர் தான் பேசுவது போன்று போலி ஆடியோ வெளியிட்டு உள்ளதாகச் சாமியார் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.