சென்னை: இதுவரை பொதுத்தேர்வு மதிப்பெண்கள் முழுமையாக வழங்கப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டு, பிளஸ்2 மதிப்பெண் வழங்கும் முறையில்,புதிய நடைமுறை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடைமுறைப்படுத்தி இருப்பதாக தெரிவித்து உள்ளது. அதன்படி முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்கள் என்னவாக வருகிறதோ, அதை அப்படியே கணக்கிட்டு வழங்க உள்ளது அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.
கொரோனா 2வது அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்து அறிவிக்கப்பட்டன. அதன்படி, முந்தைய 10, 11-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் 12-ஆம் வகுப்பு அகமதிப்பீட்டு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளதால், மாணவர்கள் உயர்கல்வியில் சேரும்போது பாதிக்கப்படுவார்கள் என கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோன்ற சிக்கலை தவிர்க்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் மதிப்பெண் கணக்கீட்டில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, இதுவரை பொதுத்தேர்வு மதிப்பெண்கள் முழுமையாக வழங்கப்பட்டு வந்த நிலையில், முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்கள் என்னவாக வருகிறதோ, அதை அப்படியே கணக்கிட்டு வழங்க உள்ளது .
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவும், மதிப்பெண் விவரங்கள் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், தசம அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாக தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
உதாரணத்துக்கு 12-ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தில் ஒரு மாணவரின் முந்தைய மதிப்பெண்களின் சராசரி 97.67 என்று வருகிறது என்றால், அந்த மாணவருக்கு 98 என்று வழங்காமல், 97.67 என்று தசம அடிப்படையில் உண்மையான மதிப்பெண்ணை வழங்கும் புதிய நடைமுறை நடப்பு கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது.
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், குறிப்பாக பொறியியல் கலந்தாய்வு போன்றவற்றுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது, அவர்களின் கட் – ஆப் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும். கட் – ஆப் கணக்கீட்டின் போது எந்த ஒரு மாணவரும் பாதிப்படைவதைத் தவிர்க்கவும், குழப்பமின்றி உயர்கல்வி மாணவர் சேர்க்கையை நடத்தவும் ஏதுவாக புதிய நடைமுறையின் மூலம் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.