சென்னை: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள 5 தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகளுடன் முதலவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாடினார். அப்போது அவர்களுக்கு போட்டியில் வெற்றிவாகை சூடி, பதக்கங்களுடன் தாயகம் திரும்ப வாழ்த்தினார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாகக் களம் கண்டு நமக்குப் பெருமை சேர்க்கவிருக்கும் தமிழ்நாட்டு வீரர்களுடன் இன்று உரையாடினேன். வெற்றி நமதாகட்டும் என்று வீரர்கள் வெற்றிவாகை சூடி, பதக்கங்களுடன் தாயகம் திரும்ப வாழ்த்தி மகிழ்ந்தேன். தேவைப்படும் உதவிகளுக்கும் உத்தரவாதம் அளித்தேன் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது கூறியதாவது
உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியில் நீங்கள் கலந்துகொள்ள இருக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போதே உங்களுக்கு எத்தகைய பெருமை இருக்கிறதோ, அதேபோன்று எனக்கும் பெருமையாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று பதக்கங்களோடு தான் தமிழ்நாட்டுக்கு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. மக்களுடைய நம்பிக்கையும் அது தான்.
உங்களில் பலருக்கும் வறுமை சூழ்ந்த வாழ்க்கையாக இருந்தாலும், விளையாட்டுப் போட்டிகளின் மீது உங்களுக்கு இருந்த ஆர்வமும், உங்கள் திறமை மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையும் தான் உங்களை இந்த உயரத்துக்கு அழைத்து வந்துள்ளது. இனிமேல் உங்களுக்கு பொருளாதார தடைகள் இல்லாதவாறு அரசு பார்த்துக்கொள்ளும். விளையாட்டில் திறமையுள்ளவர்களின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறத் தேவையான பொருட்கள், தரமான உணவு, உறைவிடம், உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படுவது உறுதிசெய்யப்படும். விளையாட்டு போட்டிகளில் பெண்கள் அதிக ஆர்வத்தோடு பங்கெடுக்கிறார்கள். அவர்களுக்கான முழு உதவியையும் இந்த அரசு செய்யும். ஆண் வீரர்களுக்கு பொருளாதார தடை மட்டும்தான் இருக்கும். பெண் வீரர்களுக்கு அத்தோடு சேர்ந்து குடும்ப தடைகள், சமுதாய தடைகள் அதிகமாக இருக்கும். இந்த தடைகளை எல்லாம் தாண்டித்தான் ஒலிம்பிக் போட்டிகளில் பயிற்சிபெற நீங்கள் வந்துள்ளீர்கள். உங்களது திறமையைத் தமிழ்நாடு அரசு மெச்சுகிறது.
அடுத்தடுத்து நடைபெற இருக்கும் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்னும் ஏராளமானவர்கள் கலந்துகொள்ளும் சூழலை அரசு ஏற்படுத்தித் தரும் என்று உறுதியளிக்கிறேன். இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.