தஞ்சை: கல் நெஞ்சையும் கலங்க வைத்த கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 17ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அந்த பள்ளி முன் குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக மக்களை பதற வைத்த கொடூர சம்பவம் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பள்ளியில் நடந்தேறியது. அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணா என்ற பள்ளியில் சத்துணவு சமையல் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி அப்பாவி பள்ளி குழந்தைகள் 94 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
இந்த தீ விபத்து உலக நாடுகளையே கலங்க வைத்தது. கூரை வேயப்பட்ட அறைகளில் குழந்தைகளுக்கு கல்வி போதித்து வந்த பள்ளி நிர்வாகத்தின் மெத்தனம், அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, 94 பிஞ்சு குழந்தைகள் அநிநாயமாக நெருப்பில் சிக்கி தங்களது உயிரை இழந்தன.
இந்த கொடுஞ்செயலின் 17ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோனா தொற்று நடவடிக்கையாக இந்த ஆண்டும் பள்ளி முன்பாக மட்டும் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெறுகிறது.
பள்ளியின் முன்பு வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் உருவப்படங்களுக்கு, உறவினர்கள், தீ விபத்தின்போது படித்த மாணவர்கள், அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.