ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி விரயம் மிகவும் குறைவாக உள்ளதற்காக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது

நாடெங்கும் கொரோனா பரவல் குறைந்து வருகின்றது என்றாலும் விரைவில் மூன்றாம் அலை கொரோனா தாக்குதல் இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.    இதையொட்டி நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.  அதே வேளையில் பல மாநிலங்களில் தடுப்புச்சிகள் விரையம் ஆவது அதிகமாக உள்ளது.

ஒவ்வொரு தடுப்பூசி பாக்கிங்கிலும் 11 டோஸ்கள் தடுப்பூசி இருக்கும்.   ஆனால் அவற்றை 10 எனவே கணக்கிடுவது வழக்கமாகும்.   இதற்குக் காரணம் உற்பத்தியாளர்கள் பாக்கிங்குக்கு ஒரு டோஸ் விரயம்  ஆகலாம் என்னும் கணக்கில் 11 டோஸ்களை 10 ஆகக் கணக்கிட்டு அனுப்புகின்றனர்.   அதையும் விரயமாக்காமல் முழு அளவில் ஒரு சில மாநிலங்களில் பயன்படுத்துகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் செவிலியர்கள் அந்த ஒரு டோஸை விரயம் செய்யாமல் அதையும் மக்களுக்கு செலுத்தி  வருகின்றனர்.   இதனால் மாநிலத்துக்கு ளிக்கபட்டதை விட அதிக அளவில் மக்கள் பயனடைகின்றனர்.  அதாவது கடந்த மே 1 முதல் ஜூன் 29 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்துக்குக் கிடைத்ததை விட 18% டோஸ்கள் அதிகம் போடப்பட்டுள்ளன.

இதற்காக  உலக சுகாதார நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்துக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது.   இதுவரை ராஜஸ்தான் மாநிலத்துக்கு 2.67 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.  மொத்தம் 2.73 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  இந்த தகவலை அம்மாநில சுகாதார அமைச்சர் ரகு சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி விரயம் ஆவது மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.  ஆனால் எங்கள் மாநிலத்தை விட அதிக அளவில் தடுப்பூசிகள் வேறு சில மாநிலங்களுக்கு அளிக்கப்படுகின்றன.   ஜூலை மாதத்தில் இதுவரை மத்திய அரசு 65 லட்சம் டோஸ்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.  ஆனால் தேவை அதை விட  பன்மடங்கு அதிகமாக உள்ளது.

இந்த மாதம் மொத்தமாக 75 லட்சம் டோச்கள் மத்திய அரசு அளிக்க உள்ளது.  மாநிலத்தின் இந்த மாதத்துக்கான மொத்த தேவை 1.5 கோடி டோஸ்கள் ஆகும்.   பல மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.  இரு தினங்களுக்கு முன்பு 8.36 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்த நிலையில் அவற்றில் 96% உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.