டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றின் புதிய பாதிப்பு  40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரசின் 2வது அலை ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்லத் திரும்பி வருகிறது. இதற்கிடையில், கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டதாக சில மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களாக  வடகிழக்கு மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை சுட்டிக்காட்டி, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் தொற்று பரவல் குறைந்து தினசரி பாதிப்பு 30ஆயிரம் என்ற அளவை எட்டிய நிலையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த 13ந்தேதி அன்று 32,906 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. அதுவே, 14ந்தேதி அன்று 38,792 ஆக உயர்ந்தது. நேற்று (14ந்தேதி)  41,806 ஆக மேலும் அதிகரித்து உள்ளது. மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாடு முழுவதும்  கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 806 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 09 லட்சத்து 87 ஆயிரத்து 880ஆக உள்ளது.

நேற்று மட்டும் கொரோனா சிகிச்சை பலனின்றி  581 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம்  மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 4,11,989  ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.32 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 39,130 பேர்  தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 01 லட்சத்து 43 ஆயிரத்து 850 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.28 சதவீதமாக உள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும் கொரோனா  காரணமாக  4,32,041 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.39 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை  செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 39 கோடியே 13 லட்சத்து 40 ஆயிரத்து 491 ஆக உள்ளது.