ஆயத்த ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக ஜவுளி வகைகளை ஏற்றுமதி செய்யும் ஜவுளி நிறுவனங்களுக்கான வரிச் சலுகை 2024 மார்ச் மாதம் வரை நீடிக்கப்படுவதாக மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

2019ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் ஆர்ஓஎஸ்சிடிஎல் (RoSCTL) எனப்படும் மத்திய மாநில வரி சலுகை 2020 மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக 2021 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வரி சலுகை 2024 ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடரும் என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதனால், திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள், கையுறைகள், ஏப்ரான்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக ஜவுளி வகைகளின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.