சென்னை: நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில், முன் ஜாமீன் கோரி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்றபோது மேடை அமைப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அது தொடர்பாக திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா மீதும் பல்வேறு நபர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது.
இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் தவறான முறையில் பேசியதற்காக ஏற்கனவே ஹெச்.ராஜா தரப்பில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப்பட்டது. ஆனால், எச்.ராஜா மன்னிப்பு கோர மறுத்து விட்டார்.
இந்த நிலையில், வழக்கு காரணமாக தான் கைது செய்யப்படலாம் என அஞ்சிய ராஜா தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அவரது மனுவில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அடுத்த விசாரணை 16ந்தேதி நடைபெறும் என கூறி வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.