புனே: கோவஷீல்டு தடுப்பூசி தயாரித்து வரும் சீரம் நிறுவனம், செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பையும் தொடங்குவதாக அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடுவதே பாதுகாப்பானது என சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவ வல்லுநனர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உலக நாடுகளில் தடுப்பூசி செலுத்தும்பணி தீவிரமடைந்து வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மக்களுக்கு தேவையான தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
ஆனால், டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதி கொண்ட அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. ஆனால், இந்தியாவில் பரவலாக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டு வருகிறது. தற்போது ஸ்புட்னிக் (Sputnik V) கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இறக்குமதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனைகள் பயனர்களுக்கு செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில், புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தி செய்ய உரிமம் பெற்றுள்ளது. இதையடுத்து, செப்டம்பர் மாதம் முதல் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் விடுத்த அறிக்கையில், , “புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்தில், செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்க உள்ளது. ஆண்டுக்கு 30 கோடி டோஸ்கள் ஸ்புட்னிக் வி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் மூலம் சாம்பிள்களை சீரம் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆக்ஸ்போர்டு அஸ்ராஜெனெகா நிறுவனத்தில் கோவஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வருவதும் சீரம் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.