பழனி: கேரள பெண் பழனியில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியது மோசடி என்றும், அந்த பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி தெரிவித்து உள்ளார்.
கடந்த வாரம் பழனிக்கு கணவனுடன் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் கூறியிருந்தார். இது இரு மாநிலத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்த புகார் மோசடியானது திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி தெரிவித்தார்.

கடந்த மாதம் 19-ந் தேதி கண்ணூரை சேர்ந்த 40 வயது பெண் தனது கணவருடன் பழனிக்கு கோவிலில் சாமி கும்பிட வந்தனர். அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். பின்னர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். இதற்கிடையே அந்த பெண்ணுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச்சென்றார்.
இதைத்தொடர்ந்து சொந்த ஊர் சென்ற அந்த கேரள பெண்ணின் கணவர் கண்ணூர் போலீஸ் நிலையத்தில், பழனிக்கு சென்றபோது அங்கு தனது மனைவியை சிலர் காரில் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இது தொடர்பாக பழனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியதோடு, புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்தார். இது இரு மாநிலத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கேரள காவல்துறையினர், அந்த புகாரை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரிக்கு ‘வாட்ஸ்-அப்’பில் அனுப்பி வைத்தனர். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவுக்கு டி.ஐ.ஜி. உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கேரள பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக கொடுத்த புகாரின் பேரில் கடத்தல் மற்றும் கூட்டு கற்பழிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விறுவிறுப்பான விசாரணை நடைபெற்றது.
கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் கேரள பெண்ணிடம் விசாரணை நடத்துவதற்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் கேரள மாநிலம் கண்ணூருக்கு நேற்று காலை விரைந்தனர். அங்கு அவர்கள் கண்ணூர் போலீசாரிடமும், பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், அவர்கள் கூறிய பொய் புகார் என்பது தெரிய வந்துள்ளத.
இதுகுறித்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம்அளித்தார். புகார் கொடுத்த கேரள தம்பதிகள், பழனியில் தங்கிருந்தது தொடர்பான வீடியோக்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் அந்த பெண்ணின் கணவர் என்று கூறப்படும் நபரின் சகோதரியிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் 2 பேருக்கும் திருமணமாகவில்லை என்பதும், அவர்கள் தம்பதியே அல்ல என்ற உண்மை தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரும், பணம் பறிக்கும் நோக்கத்தில் கேரள போலீஸ் துறை பெயரை பயன்படுத்தி பழனி விடுதி உரிமையாளரை மிரட்டி இருப்பதும், அந்த தங்கும் விடுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்பதும் விசாரணையும், சிசிடிவி புட்டேஜ் மூலமும் தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி, அந்த பெண்ணின் மருத்துவ அறிக்கையும் கிடைத்துள்ளது. அதில், அந்த பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை நடக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த அவர்கள் கூறியது பொய் புகார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில், மேலும் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]