சென்னை: நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்குங்கள் என திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
திமுக அரசு தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த மாட்டோம் என்று கூறி வந்த நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக எந்தக் காலத்திலும் நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ளாது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய கமிட்டி போடப்பட்டுள்ளது. அது தரும் அறிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வர் உரிய சட்டத்தீர்வு மூலம் நடவடிக்கை எடுப்பார். அதுவரை நீட் தேர்வு நிலை தொடரும், ஆகவே, இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், நீட் தேர்வுத் தேதி செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திமுக அரசு மக்களை குழப்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதுதொடர்பாக இபிஎஸ் பதிவிட்டுள்ள டிவிட்டில், “இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா?” என முதல்வரை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகி உள்ளது. எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு, எங்கள் அரசு செயல்படுத்திய “நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு எங்கள் அரசு அளித்ததுபோல உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்”.
இவ்வாறு கூறியுள்ளார்.