சேலம்: கிருஷ்ணகிரி அகழ்வாய்வில், உடைந்த நிலையிலான நீண்ட வாள் கண்டுபிடிக்கப்பட்டதை, அமைச்சர் தங்கம் தென்னரசு, கலைஞரின் வசனத்தோடு,  சுட்டிக்காட்டி  டிவிட் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும் பாறையில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில், உடைந்த நிலையில்  நீண்டதொரு வாள் கண்டறியப்பட்டுள்ளது. இதை அமைச்சர் தங்கம் தென்னரசு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திரைப்பட வசனத்தோடு ஒப்பிட்டு டிவிட் பதிவிட்டுள்ளார்.

அவரது டிவிட்டில், “ ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்!” 1948 ம் ஆண்டு வெளிவந்த “அபிமன்யு’ திரைப்படத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான வைர வரி  என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெற்ற அகழ்வாய்வு குறித்தும் அவர் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், தொல்லியல் துறை ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் இன்று நேரில் பார்வையிடும் வாய்ப்பினைப் பெற்றேன்.

கீழடி போன்றே தொன்மை மிக்க தமிழ்ப் பண்பாட்டு அடையாளமாகக் கருதவேண்டியது சிவகளை தொல் மாந்தர் வாழ்விடம். சிவகளை முதற்கட்ட அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற ‘ ஆதன்’ என்ற தமிழி எழுத்துப்பொறிக்கப்பட்ட பானையோடு, நமக்குக் கீழடியை நினைவூட்டுகிறது. ஆதிச்சநல்லூரைப் போல செம்பினால் ஆன பொருட்களோ அல்லது தங்கத்திலான ஆன பொருட்களோ சிவகளையில் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனினும், கருப்பு-சிவப்பு வண்ணக் கலயங்கள், குடுவைகள், பானை மூடிகள் போன்றவற்றில் வடிவமைப்பில் வரையப்பெற்றுள்ள வெள்ளை வண்ண வேலைப்பாடுகளை நோக்கும் போது இரும்புக் காலத்தில் சிவகளைப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் மிகப் பழமையானதாக இருக்கக்கூடுமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அறிவியல் பூர்வமான ஆய்வின் முடிவுகள் வெளிவரும் போது தமிழ்ப்பண்பாட்டுத் தளத்தில்பல முக்கிய புதிய திருப்பங்களுடன் கூடிய செய்திகளை சிவகளை நமக்கு வழங்கக் காத்திருக்கின்றது என்பது என் திடமான நம்பிக்கை.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.