சதுரகிரி

நேற்றிரவு பெய்த கனமழையால் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புகழ்பெற்ற கோவில்களில் மதுரை மாவட்டம் சதுரகிரி மலைக்கோவிலும் ஒன்றாகும்.   கொரோனா அச்சுறுத்தலால் இங்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நேற்று முன் தினம் முதல் நாளை வரை 4 நாட்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி கோவில் பகுதியில் கனமழை பெய்தது.  இதனால் அடிவாரம் வரை உள்ள ஓடைகளில் வெள்ளம் ஏற்பட்டது.  நேற்று முன் தினம் மேலும் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.  ஆகவே பிரதோஷத்துக்கு வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பிறகு மழை பெய்யாததால் பக்தர்கள் மலை ஏறி கோவில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களில் பலர் தரிசனம் முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில் சதுரகிரி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது.   கோவிலுக்கு வந்த 200 பக்தர்கள் கோவிலில் தங்க வைக்கப்பட்டனர்.   பிறகு மீண்டும் மழை பெய்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதையொட்டி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.   சென்னை,கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் இன்று அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.    இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் ஊருக்குத் திரும்பினர்.    கோவிலில் தங்க வைக்கப்பட்ட பக்தர்கள் இன்று காலை கீழே இறக்கப்பட்டு கயிறு கட்டிக் கொண்டு வரப்பட்டனர்.