வாஷிங்டன்

மெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோருக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இங்கு இதுவரை 3.47 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 6.22 லட்சம் பேர் உயிர் இழந்து 2.92 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1.19 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.   அதே வேளையில் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது.  அதே வேளையில் கொரோனாவால் மரணமடைவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இது குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் ரோசல் வெலன்ஸ்கி, “அமெரிக்காவில் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோர் குறைவாக உள்ள பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  அதாவது தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை 40%க்கும் குறைவாக உள்ள பகுதிகளில் 93% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைப்போல் கொரோனாவால் மரணம் அடைவோரில் 99.5% பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே ஆவார்கள்.  சுருக்கமாகச் சொன்னால் கொரோனா தடுப்பூசி குறைவாகப் போடப்படும் பகுதிகளில் கொரோனா பாதிப்பு மற்றும் மருத்துவமனை நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது” எனக் கூறி உள்ளார்.