சென்னை: கொரோனா 3வது அலையை சமாளிக்கும் அளவுக்கு ஆக்சிஜன் ஸ்டாக் இருக்கு, ஸ்டெர்லைட் ஆலை மூடப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் ஊரடங்களில் தளரவுகள் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். இதற்கிடையில், இந்தியாவில் விரைவில்  கொரோனா மூன்றாம் அலை  தாக்கம்  ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் 3வது அலையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்றும், இந்த அலையில்,  குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில்,  ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் அதன் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட திரவ ஆக்சிஜனின் அளவு குறித்தும் ஆக்சிஜன் வாயு உருளைகள் அனுப்பப்பட்ட விவரங்கள் குறித்தும் தகவல்கள் பரிமாறப்பட்டன.

கூட்டத்தில் பேசிய ஆலை எதிர்ப்பாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகும் வேதாந்தா நிறுவனம் பணியை தொடருமோ என்று அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. காலத்தை தாண்டி ஆலை இயங்குவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை மீறினால் மீண்டும் தூத்துக்குடியில் நிச்சயம் போராட்டம் எழும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  தமிழ்நாட்டில்,  கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளது. இது கொரோனா  மூன்றாம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது என தெரிவித்தார்.

மேலும்,  தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தவர், இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை புதிய அமைச்சர் நேரம் தந்தவுடன் அவரை சந்தித்து பேசுவோம் என்றும் கூறியிருக்கிறார்.