கெய்ரோ:
லக கப்பல் போக்குவரத்து நடக்கும் வழித்தடமான சூயஸ் கால்வாயின் குறுக்கே எவர்கிவன் சரக்கு கப்பல் சிக்கி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த அக்கப்பல் இழப்பீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து விடுவிக்கப்பட்டது.

193 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சூயஸ் கால்வாய், வடக்கு முனையில் உள்ள மத்திய தரைக்கடலை, தெற்கில் உள்ள செங்கடலுடன் இணைத்து ஆசியா – ஐரோப்பாவுக்கு எளிதான போக்குவரத்தை வழங்குகிறது. இதனை எகிப்து அரசின் சூயஸ் கால்வாய் ஆணையம் நிர்வகிக்கிறது.

இந்நிலையில் கடந்த ஜூன் 23 அன்று சீனாவில் இருந்து நெதர்லாந்து சென்ற எவர்கிவன் என்ற பிரம்மாண்ட சரக்கு கப்பல் இக்கால்வாயின் குறுக்காக சிக்கிக்கொண்டது. இதனால் உலக கப்பல் போக்குவரத்தே ஸ்தம்பித்தது. சுமார் ஒரு வார போராட்டத்திற்கு பின்னர் அக்கப்பல் மீட்கப்பட்டு போக்குவரத்து சீரானது.

அதன் பின்னர் சூயஸ் கால்வாய் ஆணையம், சரக்கு கப்பல் நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு கப்பலை இஸ்மாயிலியா என்ற இடத்தில் தடுத்து வைத்தது. கால்வாயில் ஏற்பட்ட சேதம், மீட்புப் பணிகளுக்கான செலவு, இதர செலவுகள் என 91.6 கோடி டாலரை இழப்பீடாக ஆரம்பத்தில் கோரியது. ஆனால் இதனை சரக்கு கப்பலின் காப்பீடு நிறுவனமான யு.கே., கிளப் ஏக மறுத்துவிட்டது.

பின்னர் சூயஸ் கால்வாய் ஆணையம் தனது கோரிக்கையை 55.5 கோடி டாலராக குறைத்தது. 3 மாத இழுப்பறிக்கு பின்னர் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் எவ்வளவு தொகை ஒப்புக்கொள்ளப்பட்டது என்ற தகவலை வெளியிடவில்லை. அதனைத் தொடர்ந்து எவர்கிவன் கப்பல் விடுவிக்கப்பட்டது.