டில்லி

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மேலும் 6 மாதம் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

 

இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.   இதனால் நாடெங்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.   எனவே ஆக்சிஜன் உற்பத்தியைத் தீவிரமாக்க அரசு உத்தரவிட்டது.   தமிழகத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கினால் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்க வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுத்தது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம் அப்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிர் இழக்கும் நிலை இருந்ததால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காகத் திறக்கலாம் எனத் தமிழக அரசுக்கு உத்தரவு இட்டது.  இதையொட்டி தமிழக அரசு கடந்த மே மாதம் முதல் வரும் 31 ஆம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது.

இங்கு உற்பத்தி ஆகும் ஆக்சிஜன் திருநெல்வேலி, தென்காசி, கன்யாகுமரி, தேனி, மதுரை, திண்டுக்கல் என 23 மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.   இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை மேலும் 6 மாதம் நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு அளித்துள்ளது.  விரைவில் உச்சநீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.