டில்லி

சென்ற 8 மாதங்களில் முதல் முறையாக ஜி எஸ் டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் கீழ் சென்றுள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாட்டில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.  அதையொட்டி நாடெங்கும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால் அனைத்து தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.  எனவே ஜிஎஸ்டி வரி வசூல் கடுமையாக சரிந்துள்ளது.  இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “கடந்த 8 மாதங்களாக ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருந்தது.  ஆனால் 2021 ஆம் வருடம் ஜூன் மாதம் அது குறைந்து ரூ.92,849 கோடி வசூல் ஆகி உள்ளது.  அதே வேளையில் சென்ற 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் மாத ஜி எஸ் டி வரி வசூல் 2% அதிகம் ஆகி உள்ளது.

மத்திய ஜிஎஸ்டி வரியாக ரூ 16,424 கோடி, மாநில ஜி எஸ்டி வரியாக ரூ.20,397 கோடி மற்றும் ஒருங்கிணைந்த ஜி எஸ் டி வரியாக ரூ.49,079 கோடி வசூல் ஆக உள்ளது.  செஸ் வரியாக ரூ.6,949 கோடி கிடைத்துள்ளது. சென்ற 8 மாதங்களுக்குப் பின் ஜி எஸ் டி வரி வசூல் ஒரு லட்சம் கோடிக்குக் கீழ் குறைந்துள்ளது. அதிகபட்சமாகக் கடந்த மே மாதம் ரூ.1.02 லட்சம் கோடி வசூலானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.