சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் குறித்து திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவரான ஈஸ்வரன் பேச்சுசர்ச்சையானது. இந்த நிலையில், அவரது பேச்சை நீக்க வேண்டும் என சபாநாயகருக்கு முன்னாள் துணைமுதல்வரும், துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“சட்டப்பேரவையில் உறுப்பினர் ஈஸ்வரன் பேசுகையில், ஆளுநர் உரை என்பதை இந்த அரசு எந்த திசையில் பயணிக்கிறது என்பதக் காட்டுகின்ற முறை என்று சொல்லிவிட்டு, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை ஆளுநர் உரையில் இருந்து நீக்கியதன் மூலம் தமிழகம் தலைநிமிர்ந்தது என்று கூறியிருக்கிறார். ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை ஆளுநர் உரையில் தவறுதலாக விடுபட்டிருக்கலாம் நான் அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை நீக்கியதால் தமிழகம் தலைநிமிர்ந்தது என்று கூறியது நியாயமா? இந்திய இறையாண்மைக்கு உகந்ததா? என்பது தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் அடிமைப்பட்ட இந்திய மக்களின் மனங்களில் நாட்டுப்பற்றை இணைக்கவும், விடுதலை வேட்கையை வளர்க்கவும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களால் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் அனைத்தும் மேடைகளில் முழங்கப்பட்டன.
இந்தச் சொல்லை முதன்முதலில் முழங்கியவர் விடுதலைப் போராட்ட வீரர் செண்பகராமன் பிள்ளை ஆவார். நாட்டுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, திருப்பூர் குமரன் ஆகியோரின் வீரமுழக்கம், தீரன் சின்னமலையின் தீரச்செயல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் அடிக்கடி முழங்கப்பட்ட ஜெய்ஹிந்த் என்ற சொல் வெற்றிக்கான வீரமுழக்கச் சொல்.
ஜெய்ஹிந்த் என்பது இந்திய விடுதலைக்காகப் போராடிய லட்சக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் கடைசி வீரமுழக்கம். இந்தியத் திருநாட்டை, இந்தியத் தாயை வணங்குவது நாட்டை வணங்குவது போன்ற செயல் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை. சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த பெரியவர் வரை நாட்டுப்பற்றைத் தட்டி எழுப்பும் மந்திரம். இதன் பொருள் வெல்க இந்தியா என்பதாகும். இந்திய நாடு விடுதலை பெற்ற நாளில் அனைத்து அஞ்சல்களிலும் ஜெய்ஹிந்த் என்ற வெற்றி இலக்குடன் முத்திரையாகப் பதிக்கப்பட்டது
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இந்த வெற்றிச் சொல் அண்மையில் தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இதனால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்று சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் பேசியது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சாதி, மத, இன, மொழிப் பாகுபாடின்றி இந்தச் சொல் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது உணர்வுபூர்வமாக மக்களால் பயன்படுத்தப்பட்ட ஒற்றைச் சொல்.
மக்களின் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பிய இந்தச் சொல்லை இழிவுபடுத்தும் வகையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகச் சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, நகைக் கடன் ரத்து, கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.