டெல்லி: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று மத்திய ஜல்சக்தி துறையை அமைச்சரை சந்தித்த நிலையில்,  தமிழகஅரசு அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்டி விட முடியாது என கூறினார்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் அணை கட்ட முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, இன்று மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் அனுமதி, ஆலோசனை இல்லாமல் எந்த முடிவும் எடுக்கப்படாது என ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உறுதியளித்துள்ளார். தமிழக அரசிடம் ஒப்புதல் பெறாமல் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட  மத்திய அரசிடம் அனுமதி பெற்றது தவறு. இதன் காரணமாக மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் வலியுறுத்தப்பட்டதாகவும், காவிரிநீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தியாகவும் கூறினார்.,

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீர் திறக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுக்க வேண்டும் என்று கூறியவர்,  கர்நாடகா ஒப்புதல் வாங்கி விட்டதால் மட்டும் மேகதாது அணை கட்டி விட முடியாது என்றார்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தரமாக ஒரு தலைவரை நியமிக்க கோரியுள்ளோம். மொத்தத்தில் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது ” என்று தெரிவித்தார்.