மும்பை: சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 12 பாஜக எம்எல்ஏக்களை ஓராண்டுக்கு சஸ்பெண்டு செய்து மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் அதிரடி உத்தரவிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநில மழைக்காலக்கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2 நாட்கள் மட்டுமே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்நாள் அமர்வான இன்று, பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை ஓராண்டுக்கு சஸ்பெண்டு செய்து சபாநாயகர் உத்தரவிட்டு உள்ளார்.

அவைக்கு இன்று காலை சட்டப்பேரவைக்குத் தலைவர் வராத நிலையில், துணை சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பிற பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ளாட்சி மன்றங்களில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றுவதற்காக, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் எனக் கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த  தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பாஜக உறுப்பினர்கள் அவையின் நடுப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டதுடன் அவைத் தலைவர் இருக்கையின் அருகில் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பாஜக உறுப்பினர்கள் சபையின் மத்திய பகுதிக்கு படையெடுத்துச்செனறு  மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்,

இதனால் சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதைடுத்து, பாஜக எம்எல்ஏக்கள்  துணைசபாநாயர் பாஸ்கர் ஜாதவ்  அறைக்கு சென்று, அவருடன்  தவறாக நடந்து கொண்டதாகவும், தவறான மொழியைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மீண்டும் சபை கூடியதும், அமளில் ஈடுபட்ட 5முன்னாள் அமைச்சர்கள் உட்பட 12 பாஜக உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை மாநில சட்டமன்ற விவகார அமைச்சர் அனில் பராப்  கொண்டு வந்தார். இந்த தீர்மானம் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இதையடுத்து,  12 பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்களை மகா விகாஸ் அகாடி (எம்விஏ) அரசு  இடைநீக்கம் செய்தது.

இடைநீக்கம் செய்யப்பட்ட 12 பாஜக உறுப்பினர்கள் விவரம்:

சஞ்சய் குட், ஆஷிஷ் ஷெலர், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அதுல் பட்கல்கர், பராக் அலவானி, ஹரிஷ் பிம்பலே, யோகேஷ் சாகர், ஜெய் குமார் ராவல், நாராயண் குச்சே, ராம் சத்புட் மற்றும் கீர்த்திகுமார் பகாடியா.

இந்த விவகாரம் மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு வெளியே ஓபிசி இடஒதுக்கீடு, மகாராஷ்டிரா பொது சேவை ஆணையம் (எம்.பி.எஸ்.சி) மற்றும் விவசாய பிரச்சினைகள் குறித்து முழக்கங்கள் மற்றும் பதாகைகளுடன் எதிர்ப்பு தெரிவித்தனர்.