கீழடி: கீழடியில் நடைபெற்று வரும் 7வதுகட்ட அகழாய்வில், ஒரே குழியில் 7 மனித எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் மத்தியஅரசு அகழ்வாய்வு பணியை கைவிட்டதால், 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து 5வது கட்ட அகழ்வாய்வு நடத்தப்பட்டது. இதில், 750-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. பின்னர் 6வது கட்ட அகழாய்வுப் பணி 2020ல் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடந்தன. இதில் 3,500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து 7வது கட்ட அகழ்வாய்வுக்கு மத்தியஅரசிடம் கோரப்பட்டது. அதன் அனுமதியைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் 21ந்தேதி 7வது கட்ட அகழ்வாய்பு பணிகள் தொடங்கியது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, தமிழக தொல்லியல்துறை மூலம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வருகின்றனர்.
கொந்தகை அகழாய்வு பணிகளில் முதுமக்கள் தாழிகளும் எலும்புக்கூடுகளும் கிடைத்து வருகின்றன. சங்க காலத்திற்கு முற்பட்ட ஈமக் காடு என்பதால் கீழடி அகழாய்வில் கொந்தகை முக்கிய இடம் வகிக்கிறது. கொந்தகை அகழாய்வு பணிகளில் 5 க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டது. இதில் இதுவரை 10 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. 2 முதுமக்கள் தாழிகளில் இருந்த மனித எலும்புக்கூடுகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலம் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் ஆய்வுப் பணிகளில், ஒரே குழியில் சமதள நிலையில் 7 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கதிரியக்க கரிமக் காலக்கணிப்பு (Carbon dating) ஆய்வுக்கு பின்னரே, மனித எலும்புக் கூடுகளின் காலம் துல்லியமாக கணிக்கப்படும் என்று தொல்லியல் துறை தெரிவித்து உள்ளது.
இந்த 7-ம் கட்ட அகழாய்வு 6 மாதங்கள் நடைபெறும். அதுபோல, கீழயில், சுமார் 2 ஏக்கரில் ரூ.12.21 கோடி மதிப்பீட்டில், சர்வதேச தரத்தில் கீழடி அகழ் வைப்பகம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.