நாக்பூர்
மாடுகளுக்காக மனிதர்களைத் தாக்கும் செயல் இந்துத்துவாவுக்கு எதிரானது என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் பசு காவலர்கள் எனக் கூறிக் கொள்ளும் பல இந்துத்துவ அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல அப்பாவிகள் உயிர் இழப்பதும் மற்றும் படுகாயம் அடைவதும் நிகழ்ந்து வருகின்றன. இந்த பசு காவலர்களுக்கு ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட பல இந்துத்துவ அமைப்புக்கள் ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “நம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இஸ்லாமியர்களை கூறுவோர் இந்துக்கள் என தங்களை சொல்லிக் கொள்ளத் தகுதி அற்றவர்கள் ஆவார்கள்.
இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை என்னும் அச்சத்தை உருவாக்க ஒரு சிலர் நினைக்கின்றனர். ஆனால் இஸ்லாமியர்கள் இது போன்ற தவறான பரப்புரையை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டால் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இஸ்லாமியர்கள் பசு பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்னும் கருத்து உள்ளது. இதனால் ஒரு சிலர் அவர்களைத் தாக்கி வருகின்றனர். மாடுகள் நன்மைக்காக மனிதர்களைத் தாக்குவது இந்துத்துவாவுக்கு எதிரானதாகும். மொத்தத்தில் நாம் அனைவருமே இந்தியர்கள் என்னும் மனப்பான்மை அனைவருக்கும் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.