புதுடெல்லி:
ஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை சந்திக்க மோடி அரசு மறுப்பது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஃபேல் விமான கொள்முதல் ஊழல் தொடர்பாக பிரான்சில் தனி நீதிபதி விசாரணையைத் தொடங்கி இருப்பதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது.

ரஃபேல் விமான கொள்முதல் ஊழல் தொடர்பாக பிரான்சில் தனி நீதிபதி விசாரணையைத் தொடங்கி இருப்பதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை டசால்ட் நிறுவனத்தின் இந்தியப் பங்குதாரராகமாற்றி, ஆதாயம் பெற வைத்ததன் பின்னணியில் இருந்த அரசியல் அழுத்தங்கள் குறித்த தகவல்களை, பிரான்ஸ் புலனாய்வு இணைய இதழான மீடியா பார்ட் ஆதாரங்களுடன் தொடர்ந்து வெளியிட்டதே இதற்குக் காரணம்.

இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பு வருமாறு:-

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 126 ரஃபேல் விமானங்களை பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்ய போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இருந்த நிலையில், அதனை கைவிட்டு 36 ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி, பிரதமர் மோடி வெளியிட்டார்.

மோடியின் இந்த அறிவிப்பு வெளியாகும் 15 நாட்களுக்கு முன்னர், அதாவது 2015 மார்ச் 26-ஆம் தேதி, ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் டசால்ட் நிறுவனம், தனது இந்திய தொழில்நுட்பப் பங்குதாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்து முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்டு இருப்பதாக பிரான்சின் மீடியா பார்ட் இணைய ஊடகம் கூறியுள்ளது.

இதற்கான ஆவணங்களை வெளியிட்டுள்ள மீடியா பார்ட், பிரதமர் மோடியின் அறிவிப்பு அப்போதைய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கே தெரியாது என்று கூறப்படும் நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளது.

அனில் அம்பானி நிறுவனத்தைடசால்ட் நிறுவனத்தோடு இணைத்ததன் மூலம், காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தியாவில் ரஃபேல் விமானங்களைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்த பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல்ஸ் கழற்றிவிடப்பட்டதாகவும் மீடியாபார்ட் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2017-ல் டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் இணைந்து, டி.ஆர்.ஏ.எல். எனப்படும் டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கி புதிய ஒப்பந்தம் செய்தன. முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கட்டாயத்தின்பேரில் ரிலையன்சுடன் டசால்ட் இந்த ஒப்பந்தத்தையும் செய்ததாகக் கூறியுள்ள மீடியா பார்ட், உண்மையில், டசால்ட் நிறுவனம் அனில் அம்பானி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் பெரும் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பது அந்நிறுவன ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

டி.ஆர்.ஏ.எல் முதலீடு மற்றும் பங்குகள் குறித்த உடன்படிக்கை விவரங்களை வெளியிட்டு அதிர்ச்சிகரமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது மீடியாபார்ட். அதாவது, மொத்தம் 169 மில்லியன் யூரோ முதலீட்டில் 159 மில்லியன் யூரோவை கொடுக்கும் டசால்ட் 49 சதவீதப் பங்குகளை வைத்திருக்கும்.

அதேவேளையில் 10 மில்லியன் யூரோவை மட்டும் முதலீடு செய்யும் ரிலைய்ன்ஸ் நிறுவனத்திற்கு 51 சதவீத பங்குகள் என்று டி.ஆர்.ஏ.எல் ஒப்பந்தம் செய்யப் பட்டிருப்பதற்கான ஆதாரங்களையும் மீடியா பார்ட் வெளியிட்டுள்ளது. வலுவான அரசியல் பலத்தால் ரிலையன்சுக்கு இப்படி ஒரு ஒப்பந்தம் சாத்தியமானதாக மீடியாபார்ட் குறிப்பிட்டுள்ளது.

இந்திய அரசின் நிர்பந்தம் காரண மாகவே ரிலையன்ஸ் நிறுவனத்தை, ரஃபேல் ஒப்பந்தத்தில் சேர்த்ததாகவும், தங்களுக்கு வேறு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும், பிரான்ஸ் அதிபராக இருந்த ஹாலேந்தே கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனைச் சுட்டிக்காட்டியுள்ள மீடியாபார்ட், முன்னதாக 2016-ஆம் ஆண்டு ஹாலண்டேவுக்கு நெருக்க மான, பிரான்ஸ் நடிகை ஜூலிகயத்திற்கு, ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் ஒரு லட்சத்து 60 மில்லியன் யூரோ நிதி வழங்கியிருப்பதை ஆதாங்களுடன் வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள மீடியா பார்ட் ஊடகத்தின் தொடர் செய்திகள், இந்திய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜே.பி.சி. விசாரணையை மோடி அரசு சந்திக்க மறுப்பதற்கான பல்வேறு கேள்விகளை எழுப்பி விமர்சனம் செய்துள்ளார்.