மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 படைப்பாளிகளின் சுதந்திரத்தை நேரடியாக பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியாவில் தயாராகும் எந்தத் திரைப்படமும் மத்திய திரைப்பட தணிக்கைக்குழுவின் சான்று பெற்றே வெளியாக முடியும். படத்தில் இடம்பெற்றிருக்கும் பாலியல், வன்முறைக் காட்சிகளைப் பொறுத்து படங்களுக்கு யு, யு/ஏ, ஏ சான்றுகள் அளிக்கப்படும். யு படத்தை அனைவரும் பார்க்கலாம். யு/ஏ படத்தை 18 வயதுக்குட்பட்டவர்கள் பெரியவர்களின் துணையுடன் பார்க்கலாம். ஏ சான்றிதழ் பெற்ற படத்தை பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவர். இந்தியாவில் யு மற்றும் யு/ஏ இரண்டும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ன் படி ஏற்கனவே இருக்கும் ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். அதன்படி ஒரு படம் தணிக்கைக்குழுவில் சான்றிதழ் பெற்றாலும், அரசால் அந்த சான்றிதழை மாற்றியமைக்க முடியும்.
அதாவது சான்றிதழை ரத்து செய்து படம் வெளியாகாமல் முடக்க முடியும். இந்த சட்ட வரைவின் மூலம் தணிக்கைக்குழு, நீதிமன்றம் இரண்டையும் தாண்டிய அதிகாரத்தை ஒன்றிய அரசு பெறுகிறது.
மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கேற்ப மனிதர்களின் சுதந்திரவெளி விரிவடையும். இந்தியாவில் அது நேர்மாறாக மாறிக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயத்தை இதுபோன்ற சட்டங்கள் ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவு 2021-க்கு, நடிகரும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டரில், உதயநிதி ஸ்டாலின்:
‘ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021’ படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது. தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். என பதிவிட்டுள்ளார்.
'ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021' படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது. தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.#cinematographact2021
— Udhay (@Udhaystalin) July 3, 2021